தமிழ் இசையின் முகத்தை மாற்றி வைத்தவர் இளையராஜா. அன்னக்கிளியில் தொடங்கிய அவரது பயணம் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் இளையராஜாவின் இசையால் ஆனது என கொண்டாடும் அளவுக்கு அவரது இசை இச்சமூகத்துக்கு பெரும் தொண்டாற்றியிருக்கிறது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இசையமைத்திருக்கிறார் இளையராஜா. பல விருதுகளை வென்றிருக்கும் இளையராஜா ஹாலிவுட்டிலும் இசையமைத்திருக்கிறார். இசை பயணம் மட்டுமின்றி ராஜ்ய சபா எம்.பியாகவும் அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இளையராஜாவுக்கு நாளை கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவிருக்கிறது. இந்தப் படத்தை பிரதமர் மோடி வழங்கவிருக்கிறார். நாளை திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர், தனி விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து திண்டுக்கல் செல்லும் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் படத்தை வழங்குகிறார். மேலும் உமையாள்புரம் சிவரமானுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படவிருக்கிறது.
முன்னதாக, இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். மோடியின் ஆட்சியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தமிழகத்தில் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், சமூக நீதிக்கு பாதகம் விளைவிக்கும் மோடி தலைமையிலான ஆட்சியை கண்டு அம்பேத்கர் எப்படி பெருமைப்படுவார். இளையராஜா இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என ஒரு தரப்பினர் இளையராஜாவை விமர்சித்தனர்.
அதேபோல், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இளையராஜா தனது மனதுக்கு தோன்றியதை சொல்லியிருக்கிறார் என மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவரை இளையராஜாவுக்கு தங்களது ஆதரவை அளித்திருந்தனர்.