வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுக்குப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். இது இடைக்கால தேர்தல் எனப்படுகிறது.
அதன்படி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் (கீழவை) பெரும்பான்மைக்கு 218 உறுப்பினர்கள் தேவை. ஆனால் நேற்று மாலை வரை அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 178 உறுப்பினர்களும், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த 198 உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருந்தனர்.
அதேபோல் 100 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் (சென்ட்) இரு கட்சிகளுக்கும் தலா 48 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். இதனால் அமெரிக்க நாடாளுமன்றம் எந்த கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து முதல் முறையாக இந்திய அமெரிக்கர் ஸ்ரீ தானேதர் (67) எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் 84,096 ஒட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்டெல் பிவிங்ஸ் 27,366 வாக்குகள் பெற்றார்.
அமெரிக்காவில் தொழிலதி பராக இருந்து அரசியல்வாதியான ஸ்ரீ தானேதர், அமெரிக்க நாடாளு மன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நான்காவது இந்திய அமெரிக்கர். இவர் தவிர ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் ஆகிய மூன்று இந்திய அமெரிக்கர்களும் அமெரிக்க எம்.பி.யாகியுள்ளனர்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், கர்நாடாகாவின் பெல்காம் மாவட் டத்தில் வளர்ந்தவர். அவர் கூறும்போது, ‘‘அமெரிக்க கனவு நனவாகியுள்ளது. நான் குடியேறிய இந்தநாடு, எனக்கு அதிக செல்வத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து பணம் சேர்க்க விரும்பவில்லை தொழிலை கைவிட்டு, சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது’’ என்றார்.