புதுடெல்லி: நாட்டில் சோலார் பயன்பாடு அதிகரிப்பால், 6 மாதத்தில் ரூ.35,000 கோடி எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் நிறுவனமான ஆற்றல் மேம்பாடு மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம், டந்த 10 ஆண்டுகளாகவே ஆசிய நாடுகளில் சோலார் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக ஆற்றல் மேம்பாடு மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் 6 மாதங்களில் சோலார் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதன் மூலம் ரூ.34,314 கோடி (4.2 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான எரிபொருள் உற்பத்தி செலவு மிச்சமாகி உள்ளது. இதன் மூலம் மின் உற்பத்திக்கு தேவையான 2 கோடி டன் நிலக்கரியும் சேமிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளும் இணைந்து, சோலார் மூலம் ரூ.2,77,780 கோடி (34 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான எரிபொருள் உற்பத்தி செலவை மிச்சப்படுத்தியுள்ளன.
இது 6 மாத மொத்த மின் உற்பத்தி செலவில் 9 சதவீதம் என்பது வரவேற்கத்தக்கது. சோலார் மின் உற்பத்தி மூலம் இந்தியாவில் நடப்பாண்டின் முதல் மாதத்தில் 2 கோடி டன் அளவிலான நிலக்கரியும் சேமிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலக்கரியை பற்றாக்குறை ஏற்படவுள்ள காலங்களில் கூடுதலாக, குறிப்பாக வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த 7 நாடுகளில் சோலார் மின் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் மட்டும் 1,71,570 கோடி (21 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான மின் உற்பத்திக்காக எரிபொருள் செலவு சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.