இந்தியா வெல்லுமா… பைனலுக்கு செல்லுமா? இங்கிலாந்துடன் இன்று செமி பைனல்| Dinamalar

அடிலெய்டு: ‘டி-20’ உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இன்று இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி பைனலுக்கு முன்னேற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மீள்வாரா ரோகித்

நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் பங்கேற்ற இந்திய அணி, பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி இதுவரை 5 போட்டிகளில் 7, 11, 23, 11, 27 என குறைந்த ரன் தான் எடுத்தது.

ரோகித்தும் இதுவரை 5 இன்னிங்சில் 89 ரன் தான் எடுத்துள்ளார். இவர் மீண்டு வந்தால் நல்லது. அடுத்தடுத்த இரு போட்டியில் அரைசதம் அடித்த ராகுல் (123), தலா 3 அரைசதம் விளாசிய ‘சீனியர்’ கோஹ்லி (246 ரன்), சூர்யகுமார் (225) என மூவரும் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

வருவாரா ரிஷாப்

பின் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா (5ல் 65 ரன்), ஒரு முறை மட்டும் அதிகபட்சம் 40 ரன் (எதிர்-பாக்.,) எடுத்தார். மற்றபடி பெரியளவு சோபிக்காதது ஏமாற்றம். விக்கெட் கீப்பராக ‘பினிஷர்’ தினேஷ் கார்த்திக் (14 ரன்) வருவாரா அல்லது ரிஷாப் பன்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா என இன்று தெரியும்.

அர்ஷ்தீப் நம்பிக்கை

பந்துவீச்சில் ‘வேகத்தில்’ அர்ஷ்தீப் நம்பிக்கை தருகிறார். இதுவரை 10 விக்கெட் சாய்த்த இவர், மீண்டும் மிரட்டினால் நல்லது. முகமது ஷமி (6), புவனேஷ்வர் குமார் (4) கூடுதல் விக்கெட்டுகள் சாய்க்க முயற்சிக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா (8) ‘ஆல் ரவுண்டர்’ திறமை அணிக்கு கைகொடுக்கலாம். சுழலில் அஷ்வின் (4) அனுபவ பந்துவீச்சுடன், அக்சர் படேல் (3) வருவாரா அல்லது சகால் இடம் பெறுவாரா என்பது உறுதியில்லாமல் உள்ளது.


பேட்டிங் எப்படி

இங்கிலாந்து அணி ‘சூப்பர்-12’ சுற்றில் 5 போட்டியில் 3 வெற்றியுடன் (1 ரத்து, 1 தோல்வி) அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் துவக்கத்தில் ஹேல்ஸ் (125), கேப்டன் பட்லர் (119) ஜோடி சிறப்பாக செயல்படுகிறது. ‘மிடில் ஆர்டரில்’ அனுபவ மலான் (56) காயத்தால் அவதிப்படுவதால், பில் சால்ட் வந்துள்ளார். லிவிங்ஸ்டன் (54), ஸ்டோக்ஸ் (58) பெரியளவு ரன் சேர்க்காதது பலவீனம்.

பந்துவீச்சில் சாம் கர்ரான் 10 விக்கெட் சாய்த்து மிரட்டுகிறார். 9 விக்கெட் சாய்த்த மார்க் உட், காயம் காரணமாக களமிறங்குவது சந்தேகமாக உள்ளது. தவிர ஸ்டோக்ஸ் (5), வோக்ஸ் (4) தங்கள் பங்கிற்கு விக்கெட் சாய்க்க முயற்சிக்கலாம். சுழலில் அடில் ரஷித், மொயீன் அலி இணைந்து இதுவரை 1 விக்கெட் மட்டும் வீழ்த்தியது இந்திய ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி தான்.

12

இந்தியா, இங்கிலாந்து அணிகள் 22 ‘டி-20’ல் மோதின. இதில் இந்திய அணி 12ல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 10ல் வென்றது.
* இரு அணிகள் கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 4, இங்கிலாந்து 1ல் வென்றன.

35 ஆண்டுக்குப் பின்

மும்பையில் 1987ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணி (254/6), இந்தியாவை (219/10) வென்றது. தற்போது 35 ஆண்டுக்குப் பின் இந்தியா, இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை தொடர், அரையிறுதியில் மோதவுள்ளன.

937 ரன்

அடிலெய்டு மைதானம் கோஹ்லிக்கு ராசியானது. மூன்று வித கிரிக்கெட்டில் இங்கு களமிறங்கிய 10 போட்டியில் கோஹ்லி 937 ரன் குவித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இங்கு 5 சதம் விளாசிய இவர், அடிலெய்டில் விளையாடிய 2 ‘டி-20’ ல் 90, 64 ரன் எடுத்துள்ளார்.
* நேற்று கோஹ்லி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட, ஹர்ஷல் படேல் பந்து வீசினார். வேகமாகச் சென்ற பந்து, கோஹ்லியின் வலது கட்டை விரலில் தாக்கியது. தாங்க முடியாத வலியில் துடித்த அவர், பயிற்சியில் இருந்து வெளியேறினார். காயம் பெரியளவு இல்லை என்பதால் இன்று களமிறங்க காத்திருக்கிறார்.

மழை வருமா

அடிலெய்டில் போட்டி துவங்கும் இரவு நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மழைக்கு 5 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை வந்தால், மறுநாள் போட்டியை தொடர ‘ரிசர்வ் டே’ உண்டு.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.