உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளை சோகத்தில் ஆழ்த்திய பட்டாசு ஆலை வெடிவிபத்து-நடந்தது என்ன?

மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட அழகுசிறை கிராமத்தின் அருகே செயல்பட்டு வந்த அனுசியாதேவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் இன்று மதிய உணவு இடைவேளையின் போது திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டடங்களில் பணியாற்றி வந்த வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி, வல்லரசு, கோபி மற்றும் புளியகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விக்கி, அழகுசிறையைச் சேர்ந்த பிரேமா என்ற 5 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அழகுசிறையைச் சேர்ந்த அங்கம்மாள், கருப்பசாமி, நாகலட்சுமி, மகாலெட்சுமி, ஜெயப்பாண்டி, பச்சையக்காள், கருப்பசாமி, அன்னலட்சுமி, மாயத்தேவர், பாண்டியம்மாள், பேச்சியம்மாள் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்த நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில் மகாலட்சுமி என்ற பெண் பலத்த காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
image
தகவலறிந்து விரைந்து வந்து உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி தாலுகா தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் திருமங்கலம், சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் சிதறிய உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, டிஐஜி பொன்னி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உள்ளிட்டோர் நேரில் ஆய்வுசெய்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக தலா 5 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உடனடியாக உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
image
மேலும் இந்த விபத்து தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பின்பே அனுமதி வழங்கப்படும் சூழலில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தார். பட்டாசு வெடித்து 5 பேர் பலியான சம்பவம் உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.