உச்ச நேர மின்கட்டணத்தை முற்றிலும் நீக்க வேண்டும்: குறு, சிறு தொழில்துறையினர் கருத்து

கோவை: குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்சபயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என,கோவை தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தாழ்வழுத்த மின்நுகர்வோர் பிரிவின்கீழ் வரும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு முதல் முறையாக உச்சபட்ச பயன்பாட்டு நேரம் (காலை 6 முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை) மின் கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதற்கு தொழில் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்சபட்சபயன்பாட்டு நேர மின்கட்டணத்தில் 10 சதவீதம் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, கோவை மாவட்டசிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் திருஞானம் கூறும்போது, “அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. உயர் அழுத்த மின் நுகர்வோருக்கு நிலைக் கட்டணம் குறைப்பது உள்ளிட்ட மற்ற கோரிக்கைகள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி மற்றும் காட்மா தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறும்போது, “தமிழகஅரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருப்பினும் உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் மற்றும் நிலைக் கட்டண உயர்வில்இருந்து குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்” என்றனர்.

இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம்(டாக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, “மின் கட்டணம் குறைப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தொழில் துறையினர் கேட்டது வேறு, தமிழக அரசு செய்துள்ளது வேறு. நிலைக்கட்டணம் குறைக்கப்படவில்லை. உச்சபட்ச பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை அடியோடு நீக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்துடைப்பாகவே கருதுகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.