தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் இன்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையின் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளின் கொள்ளளவை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது “சென்னையில் மழைக்குப்பின் நீர் நிலைகளில் தூர்வாரப்பட்டுள்ளதால் அதிக கன மழை பெய்யும் பொழுது நீர் நிலையில் நீர்மட்டம் அதிகரித்து மழை நீர் வடிகால்கள் இருந்து வரும் நீரை உள்வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சென்னையின் சாலைகளில் நீர் தேக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இவற்றை தவிர்க்கும் வகையில் குடிநீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய ஏரிகளை தவிர்த்து மற்ற ஏரிகள், குளங்கள் உள்ள நீர் இருப்பின் முழு கொள்வளவில் இரண்டு முதல் மூன்று அடி வரை நீர்மட்டத்தை குறைத்துக் கொள்ள உத்தரவிட்டு உள்ளோம். அப்பொழுது ஒரு நேரத்தில் பத்து சென்டிமீட்டர் மழை பெய்தாலும் சாலை மற்றும் தெருக்களில் நீர் தேங்காமல் வடிகால் வழியாக நீர் நிலைகளுக்கு மழைநீர் செல்லும். சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்யும் பட்சத்தில் நீர் இருப்பை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்” என தலைமை பொறியாளர் கூறியுள்ளார்.