பணகுடி: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோவின், திரவ இயக்க திட்ட ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கு கிரையோஜெனிக் இயந்திரத்தின் சோதனைகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இஸ்ரோவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு பயன்படும் சி20இ11 எம்கே III என்ற கிரையோஜெனிக் இன்ஜின் வெப்ப சோதனை மற்றும் உந்தும சோதனை நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது. சுமார் 70 விநாடிகள் நீடித்த இந்த சோதனை முழு வெற்றி பெற்றதாக விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் ராக்கெட்களில் பயன்படும் மிக முக்கிய இயந்திரம் கிரையோஜெனிக். அதிக எடை கொண்ட செயற்கை கோள்களையும், ராக்கெட்களை விண்வெளியில் அதிக தொலைவிற்கு செலுத்தவும் கிரையோஜெனிக் இயந்திரமே பயன்படுகிறது. கடந்த மாதம் 28ம் தேதி கிரையோஜெனிக் இயந்திரத்தின் சூடான சோதனை மகேந்திரகிரி விண்வெளி மையத்தில் 28 விநாடிகள் நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது 70 விநாடிகள் சோதனை நடந்துள்ளது. இந்த சோதனைகளின் வெற்றி மூலம் அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவது இலகுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.