கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில் சிலரது பெயர்கள் அடங்கிய பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி, புல்லுக்காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் காவல்துறை உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர் சோதனையின் முடிவிலேயே ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா அல்லது யாரேனும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனரா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM
