சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் கொள்ளளவை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் கொள்ளளவை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், “சென்னையில் மழைக்குப் பின் நீர்நிலைகளில் துார்வாரப்பட்டு உள்ளது. ஆனால், அதிக கனமழை பெய்யும்போது நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து, மழைநீர் வடிகால்களில் இருந்து வரும் நீரை உள்வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், சாலைகளில் நீர் தேக்கம் காணப்படுகிறது.
இவற்றை தவிர்க்கும் வகையில், குடிநீர் ஆதாரங்களாக இருக்கக் கூடிய ஏரிகளைத் தவிர்த்து, மற்ற ஏரிகள், குளங்களில் உள்ள நீர் இருப்பின் முழு கொள்ளளவில் இரண்டு முதல் மூன்று அடி வரை நீர் மட்டத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். அப்போது தான், ஒரே நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்தாலும் சாலைகள், தெருக்களில் நீர் தேக்கம் இல்லாமல், வடிகால் வாயிலாக, நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லும். தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில், அவ்வப்போது நீர் இருப்பை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்” என்று அவர் கூறினார்.