சென்னை: ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னையிலும் நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வாசிக்க > வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக கனமழை வாய்ப்பு; 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்