புதுடெல்லி: சென்னை ஐஐடி வளாகத்தில் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒற்றை வார்ப்பில் உருவாக்கிய ராக்கெட் இன்ஜின் ‘அக்னிலெட்’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒற்றை வார்ப்பில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் இன்ஜின் இதுவாகும். இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவின் உதவியுடன் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நவம்பர் 4-ம் தேதி இந்த இன்ஜின் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
3டி பிரின்டிங் தொழில்நுட்பம் கட்டுமானத் துறையிலும் உற்பத்தித் துறையிலும் பெரும் புரட் சியை நிகழ்த்தி வருகிறது. வழக்கமான நடைமுறையில் ஒரு கட்டிடத்தை கட்டி முடிக்க 3 மாதங்கள் ஆகுமென்றால், அதே கட்டிடத்தை 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் மூலம் 1 வாரத்துக்குள் கட்டி முடித்துவிட முடியும்.
அதேபோல், உற்பத்தித் துறையிலும், 3டி பிரின்டிங் மூலம் மிககுறுகிய கால அளவில் பொருள்களை தயாரித்து விட முடியும். அந்த வகையில் உலக அளவில் வளர்ந்துவரும் மிக முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்றாக 3டி பிரின்டிங் பார்க்கப்படுகிறது.