அடிலெய்டு: ‛டி-20′ உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, பைனலுக்கு முன்னேறியது. பைனலில் பாக்., அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவில் ‛டி-20′ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்த பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறியது. இன்று (நவ.,10) அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் ‛டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கேப்டன் ரோகித், ராகுல் இருவரும் இந்தியாவின் இன்னிங்க்ஸை துவக்கினர். கடந்த இரு போட்டிகளில் அரைசதம் விளாசிய ராகுல், இப்போட்டியில் 5 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் ரோகித் உடன் ஜோடி சேர்ந்த கோஹ்லி பொறுப்புடன் விளையாடினார். ரோகித் 27 ரன்னில் வெளியேற, அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் 14 ரன்னில் கேட்சானார். மறுமுனையில் அசத்தலாக விளையாடிய கோஹ்லி அரைசதம் அடித்து அவுட்டானார். 19வது ஓவரில் பவுண்டரி அடித்து பாண்ட்யா அரைசதம் கடந்தார்.
கடைசி ஓவரில் தேவையில்லாமல் ரன் ஓட ஆசைப்பட்டு ரிஷப் பன்ட் (6) ரன்அவுட்டானார். கடைசி பந்தில் ஹர்த்திக் ‛ஹிட் விக்கெட்’ முறையில் 66 ரன்னில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன் 3 விக்., வீழ்த்தினார்.

169 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் துவக்கம் தந்தனர். இருவரும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக ஹேல்ஸ் சிக்சராக பறக்கவிட்டார்.
அவர் 28 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பவுண்டரியாக அடித்துவந்த பட்லர் 36 பந்தில் சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் விழி பிதுங்கினர். 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 86 ரன்னுடனும், பட்லர் 80 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
பைனல்
இந்த வெற்றியின் மூலம் பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, நவ.,13ல் நடக்கவுள்ள பைனலில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி 2010ல் டி20 உலக கோப்பையை வென்றிருந்தது. அதன்பிறகு 2016ல் பைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியுற்றது. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பைனலுக்கு அந்த அணி முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் 2007 உலக கோப்பை பைனலில் இந்தியாவிடம் தோல்வியுற்று, 2009ல் கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 13 ஆண்டுகளுக்கு பிறகு பைனலுக்கு முன்னேறியது. இரு அணிகளுக்கும் இது மூன்றாவது உலக கோப்பை பைனல்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement