சென்னை: திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயருக்கு பதிலாக, கொடி காத்த குமரனின் பெயரை வைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2019-ம் ஆண்டு பழைய திருப்பூர் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை சீரமைக்க ரூ. 36.5 கோடியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கினார். மேலும், சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், புதிய பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக தயராக உள்ள நிலையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு “கருணாநிதி மத்திய பேருந்து நிலையம்” என மாற்ற தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கூடுதல் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, தனது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “திருப்பூர் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு” என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.