சிவசேனா ராஜ்ய சபை எம்.பி.சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சஞ்சய் ராவத் விசாரணைக்கு என்று அழைத்து செல்லப்பட்டு நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். கடந்த மூன்று மாதத்திற்கும் மேல் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சஞ்சய் ராவத்துடன் அவரின் உறவினர் பிரவீன் ராவத் என்பவரும் கைது செய்யப்பட்டு இருந்தார். இருவரும் ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு கடந்த மாத மத்தியில் விசாரித்து முடிக்கப்பட்டது.
நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழக்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே, குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரையும் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். `இவ்வழக்கில் இரண்டு பேரும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது’ என்று கருத்து தெரிவித்தார் நீதிபதி. அதோடு, “வெறும் சிவில் தகராறுகளை பணமோசடி என்றோ அல்லது பொருளாதார குற்றம் என்றோ முத்திரை குத்தி அப்பாவியை கைது செய்ய முடியாது. ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்ததில் பிரவின் ராவத் சிவில் வழக்குகளுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சய் ராவத் எந்த வித காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பட்டமான உண்மை” என்று நீதிபதி தெரிவித்தார். ஜாமீன் வழங்கப்பட்டவுடன் சஞ்சய் ராவத் நீதிபதியை பார்த்து கை கூப்பி வணங்கி மிக்க நன்றி என்று தெரிவித்தார்.

அமலாக்கப்பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் உத்தரவை வெள்ளிக்கிழமை வரை அமல்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் உடனே மும்பை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் இம்மனுவை விசாரித்த நீதிபதி பாரதி, இரு தரப்பினரின் கருத்தை கேட்காமல் இதில் தன்னால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். `தீர்ப்பு நகலை நான் பார்க்கவில்லை. எந்த அடிப்படையில் ஜாமீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதே போன்று எந்த அடிப்படையில் நீங்கள் மேல் முறையீடு செய்கிறீர்கள் என்றும் எனக்கு தெரியாது. எனவே இரு தரப்பு கருத்தையும் கேட்காமல் எப்படி என்னால் உத்தரவு பிறப்பிக்க முடியும்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதோடு இம்மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார். மற்றொரு புறம் சஞ்சய் ராவத்தை சிறையில் இருந்து விடுவிக்க அவரின் வழக்கறிஞர் அவசர அவசரமாக வேலை செய்தார். இதையடுத்து நேற்று மாலையில் சிறையில் இருந்து சஞ்சய் ராவத் விடுவிக்கப்பட்டார். சஞ்சய் ராவுத் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றவுடன் ஆர்தர் ரோடு சிறை, பாண்டூப்பில் உள்ள சஞ்சய் ராவத் இல்லம், தாதரில் சிவசேனா பவனில் கட்சி தொண்டர்கள் அதிக அளவில் கூடினர்.

சஞ்சய் ராவத் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் சிவசேனா தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் பேட்டியளித்த சஞ்சய் ராவத், “நாங்கள் போராட்டக்காரர்கள், தொடர்ந்து போராடுவோம். உயிர் உள்ளவரை தொடர்ந்து சிவசேனாவில் இருப்பேன்” என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா செய்தி தொடர்பாளர் சுஷ்மா, “புலி வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.ரோஹித் பவார் வெளியிட்டுள்ள செய்தியில், `புலி கூண்டில் இருந்து வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.