திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் இன்று மாலை நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார். அங்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பிரதமரை வரவேற்கின்றனர். தொடர்ந்து, பல்கலை. வளாகத்துக்கு காரில் செல்லும் பிரதமர், பிற்பகல் 3 மணிக்கு பல்கலை. வளாகத்தில் உள்ள பல்நோக்கு கூட்ட அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இந்த விழாவுக்கு, பல் கலை. வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகிக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகின்றனர். இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் 4 பேருக்கு தங்கப் பதக்கம், பட்டங்கள், இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி பேசுகிறார். விழா முடிவடைந்த பின்னர் மாலை 5 மணியளவில் காரில் ஹெலிகாப்டர் தளத்துக்குப் புறப்பட்டுச் செல்லும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்தை அடைகிறார். பின்னர், மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம், சின்னாளப் பட்டி, அம்பாத்துரை பகுதிகள் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.