புதுடில்லி,’முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி அமைச்சர்கள் மீதான புகார்களை திரும்ப பெற வலியுறுத்தி, சிறையில் என்னை துன்புறுத்துகின்றனர்.
‘புதுடில்லிக்கு வெளியே வேறு சிறைக்கு என்னை மாற்ற உத்தரவிட வேண்டும்’ என, புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு, கைதி சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள மண்டோலி சிறையில், கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், தன் மனைவி லீனா பால் உடன் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் பல்வேறு பண மோசடி வழக்குகளில் சிக்கி கைதாகி உள்ளனர்.
இந்நிலையில், கைதி சுகேஷ், புதுடில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அவரது வழக்கறிஞர் அசோக் கே.சிங் வாயிலாக அந்த கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில், ஆம் ஆத்மி கட்சிக்காக 2016ல், 50 கோடி ரூபாய் நிதி கொடுத்ததாகவும், அதன்பின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் பதவி மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி தருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாயும், புதுடில்லி சிறைத்துறை இயக்குனர் சந்தீப் கோயலுக்கு 12.50 கோடி ரூபாயும் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மேலும் ஒரு கடிதத்தை சமீபத்தில் எழுதினார்.
அதில், சிறையில் தான் மிரட்டப்படுவதாகவும், இந்த வழக்கை விரைந்து சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கவும் கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பரபரப்புகளே இன்னும் ஓயாத நிலையில், சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து கவர்னருக்கு மூன்றாவது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
புதுடில்லி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது நான் புகார் தெரிவித்துள்ளதால், புதுடில்லி சிறையில் எனக்கும், என் மனைவிக்கும் பாதுகாப்பு இல்லை. இரண்டு நாள் முன்னர் கூட என்னை அடித்து துன்புறுத்தினர்.
சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் புகாரை திரும்ப பெறுமாறு எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். மிகக் கடுமையான துன்புறுத்தல்களை சந்தித்து வருகிறேன்.
இந்த விவகாரத்தில் சமரசமாக போகும்படி அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை நிராகரித்தால் நானும், என் மனைவியும் கொல்லப்பட வாய்ப்புள்ளது.
எனவே, இந்த புகார் மீதான விசாரணை முடிவடைந்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை என்னையும், என் மனைவியையும் உத்தர பிரதேசம், ஹரியானா அல்லது ஜார்க்கண்ட் சிறைகளுக்கு மாற்ற உத்தரவிடுங்கள்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகை ஜாக்குலினை கைது செய்யாதது ஏன்?
சுகேஷ் சந்திரசேகர், 32, திஹார் சிறையில் இருந்த போது தொழிலதிபர்கள் மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் சகோதரர்களுக்கு, ‘ஜாமின்’ வாங்கி தருவதாக ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தார். இந்த பணத்தில், ‘பாலிவுட்’ நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு விலை உயர்ந்த சொகுசு கார் உட்பட பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை சுகேஷ் அளித்துள்ளார். எனவே,
இந்த வழக்கில் நடிகை ஜாக்குலினையும் குற்றவாளியாக அமலாக்கத் துறை இணைத்தது. அவரிடம் தொடர் விசாரணை நடந்து வந்த நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க, நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஜாக்குலினுக்கு எதிராக, ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால், ஜாமின் கோரி புதுடில்லி நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறையிடம் பல அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி முன்வைத்தார்.
அதன் விபரம்:ஜாக்குலினுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப் பித்துள்ள நிலையில், அவரை இன்னும் கைது செய்யாதது ஏன்? இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் சிறையில் இருக்கும் நிலையில், விரும்பியவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து கைது செய்திருப்பது ஏன்?இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.ஜாக்குலின் ஜாமின் மனு தொடர்பாக, நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்