பேச்சிலர் வாழ்க்கையில் இருந்தது போன்று நிச்சயமாக திருமண வாழ்க்கையில் இருக்க முடியாது, பெரும்பாலும் திருமணம் முடிந்துவிட்டால் நண்பர்களின் தொடர்புகள் இல்லாமல் போய்விடும். ஒரு சிலருக்கே திருமணத்திற்கு பிறகும் நட்பு தொடர்கிறது இருப்பினும் முன்னர் இருந்தது போல் நண்பர்களுடன் இருக்க முடியாது என்பது கசப்பான உண்மை. அதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய எதிர்கால தேவைகளை போர்த்தி செய்யும் டாஸ்க்கை நோக்கி ஒவ்வொருவரும் ஓட ஆரம்பித்து விடுகிறோம், வாழ்க்கை துணையுடன் நேரத்தை கழிக்கிறோம், இதனால் நண்பர்களுடன் நேரம் செலவிடமுடியாமல் போகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஒரு நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான சம்பவம் கேரளாவில் நடந்தேறியுள்ளது.
அதாவது கேரளாவை சேர்ந்த ரகு என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவருக்கும் நவம்பர் 5ம் தேதி பாலக்காட்டிலுள்ள கஞ்சிக்கோட்டில் திருமணம் நடைபெற்றது, அந்த திருமணத்திற்கு வருகை புரிந்திருந்த ரகுவின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் தங்கள் நண்பனை தங்களுடன் இரவு 9 மணி வரை நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்தை வாங்கினர், இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் எழுதப்பட்ட ரூ.50 பாத்திரத்தில் மணமகள் அர்ச்சனா.எஸ் கையெழுத்திட்டிருக்கிறார், அந்த ஒப்பந்த பத்திரத்தில், “திருமணத்திற்குப் பிறகும் என் கணவர் ரகு.எஸ் கேடிஆர் இரவு 9 மணி வரை அவரது நண்பர்களுடன் நேரத்தை செலவிட அனுமதிக்கப்படுவார். அந்த நேரத்தில் நான் அவரை தொலைபேசியில் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது.
திருமணத்தில் நண்பர்கள் இதுபோன்று செய்வது இது முதல்முறையல்ல, சமீபகாலமாக திருமணத்தில் நண்பர்கள் வந்து பல சுவாரஸ்யமான வேலைகளை செய்துகொண்டு இருக்கின்றனர். இதேபோன்று அசாமில் கடந்த ஜூலை மாதம் நடந்த ஒரு திருமணத்தில் தம்பதியினர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் என பட்டியலிட்டு ஒப்பந்தம் செய்தனர். அதில் மணமகள் தினமும் சேலை அணிய வேண்டும், மாதத்திற்கு ஒரு பீட்சா மட்டுமே சாப்பிடுவது, தினமும் ஜிம்மிற்குச் செல்வது, ஒவ்வொரு 15 நாட்களுக்குப் பிறகு ஷாப்பிங் செய்வது, வீட்டில் சமைத்த உணவுகளுக்கே முன்னுரிமை கொடுப்பது போன்றவை அந்த பட்டியலில் இடம்பெற்று இருந்தது. இதேபோன்று ஒரு திருமணத்தில் நண்பர்கள் மணமகன் தங்களுடன் கிரிக்கெட் விளையாட வர அனுமதிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினர்.