மாங்காடு அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி… பரபரப்பு…

சென்னை; மாங்காடு அருகே மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பத்திரிகையாளர் ஒருவர் விழுந்து இறந்த நிலையில், நேற்றுமுன்தினம்  கடலூர் அருகே சாலையோரத்தில் பேருந்து நிலையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மாணவர் ஒருவர் விழுந்து உயிரிழந்த நிலையில், இன்று மாங்காட்டில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் தேங்குவதை தடுக்க பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நடைபெறும் பகுதியை சுற்றி, அடைப்பு ஏற்படுத்தப்பட்டு, பணிகள் நடைபெற வேண்டும். ஆனால், சென்னை போன்ற முக்கிய பகுதிகளில் மட்டும், மழைநீர் வடிகால் பணி நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மற்ற பெரும்பாலான பகுதிகளில், அதுபோன்ற நடவடிக்கையை ஒப்பந்ததாரர்கள் எடுப்பதில்லை. இதை அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை. இதனால் பலர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் பலர் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னை அடுத்த மாங்காடு பகுதியில் மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த லட்சுமிபதி (42)  என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பணிகள், கிடப்பில் போடப்பட்ட நிலையில், அதை சுற்றி தடுப்பு ஏதும் அமைக்காதால்,  இந்த பள்ளத்தில் கால் இடறி விழுந்த  தனியார் நிறுவன ஊழியர்  அதில் இருந்த மழைநீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து லட்சுமி உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மழை நீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் நடந்து வருவதும், இதுபோல எந்தவித தடுப்பும் இன்றி கிடப்பில் போடுவதும்தான் உயிரிழப்புக்கு காரணம். அரசு இந்த விஷயத்தில் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும் என  அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.