மாலி:மாலத்தீவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று முன் தினம் நிகழ்ந்த தீ விபத்தில், அங்கு தங்கி இருந்த எட்டு இந்திய தொழிலாளர்கள் உட்பட ௧௦ பேர் கருகி பலியாகினர்.
தெற்காசிய நாடான மாலத்தீவின் தலைநகர் மாலியில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இங்கு, நிருபெஹி என்ற பகுதியில் உள்ள ஒரு விடுதியில், இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர்.
இதன் தரைத்தளத்தில் வாகனங்களை பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் உள்ளது. இதில் நேற்று முன் தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாகப் பரவி, தொழிலாளர்கள் தங்கி இருந்த முதல் தளம் பற்றி எரிந்தது. இந்த விபத்தில், துாங்கிக் கொண்டிருந்த எட்டு இந்தியர்கள் உட்பட மொத்தம் ௧௦ பேர் கருகி பலியாகினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்து, ௨௮ பேரை மீட்டனர். ”இச்சம்பவத்தில், எட்டு இந்தியர்கள் உட்பட மொத்தம் ௧௦ பேர் பலியாகியுள்ளனர். மற்ற இருவர் எந்த நாட்டவர் எனத் தெரியவில்லை.
இந்த தீ விபத்தால் நாங்கள் துயரம் அடைந்துள்ளோம்,” என அந்நாட்டில் உள்ள இந்திய துாதரக அதிகாரி ராம்திர் சிங் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் மொகமத் சோலி கூறுகையில், ”இச்சம்பவம் மிகவும் வேதனையை தருகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவம் குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement