மீட்கப்பட்ட பயணிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கை கண்காணிப்பு

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, 2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாமில் உள்ள வுங் டௌ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.

2022 நவம்பர் 07ஆந் திகதி பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கடற்பரப்பில் சுமார் 303 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளது. கப்பல் ஊழியர்கள் கப்பலில் இருந்த பயணிகளுடன் கப்பலைக் கைவிட்டுச் சென்றுள்ளதாக கப்பலைத் தொடர்பு கொண்ட இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முயற்சியின் பேரில், இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களால் தொடர்பு கொள்ளப்பட்ட ஜப்பானியக் கொடியுடன் கூடிய ‘ஹீலியோஸ் லீடர்’ என்ற கப்பலினால் பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து பயணிகள் மீட்டெடுக்கப்பட்டனர். தெற்கு வியட்நாமில் உள்ள வுங் டௌ துறைமுகத்தில் வைத்து குறித்த பயணிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பயணிகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் செயன்முறை, வியட்நாம் அதிகாரிகள் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பால் மேற்கொள்ளப்படும்.

அவர்களது குடியுரிமை மற்றும் இதர சம்பிரதாயங்களை உறுதிப்படுத்தும் செயன்முறை நிறைவடைந்ததும் குறித்த பயணிகளை விரைவாக நாட்டிற்கு மீள அனுப்புவதற்காக, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 நவம்பர் 09

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.