‘ரசிகர்களே தொந்தரவு செய்யாதீங்க’ – சிம்புவின் வேண்டுகோள்

மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு சமீபத்தில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. சித்தி இத்னானி,  அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் இன்றளவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. 

30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான வெந்து தணிந்தது காடு 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஓடிடியில் ரிலீஸாகியும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் வெந்து தணிந்தது காடு படத்தின் 50ஆவது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. இதில் சிம்பு, கௌதம், ஐசரி கணேஷ், உதயநிதி ஸ்டாலின், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சிம்பு, “இந்த காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம். சமீபத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெறுகிறது. விக்ரம் தொடங்கி பொன்னியின் செல்வன், கன்னட திரைப்படமான காந்தாரா மற்றும் தற்போது வெளியாகியிருக்கும் லவ் டுடே வரை படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எல்லா இயக்குநர்களுக்கும் நல்ல மற்றும் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களின் அந்த கனவை நிறைவேற்ற கூடிய நல்ல காலகட்டம் இப்போது தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது. 

தமிழ் சினிமா இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் வித விதமான திரைப்படங்களை ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள். வெந்து தணிந்தது காடு படம் வெளியாகும் முன் ஒருவித பயத்தில் இருந்தேன். ஏனென்றால் வழக்கமான ஹீரோவை முன்னிறுத்தும் படமாக இல்லாமல் இப்படம் இருந்தது. முத்துவாக நடிப்பதற்கு நான் அதிகம் மெனக்கெட்டேன். ஆனால், மக்கள் வித்தியாசமான கதைகளை ரசிக்க தொடங்கியிருப்பதால், அந்த ரசனை என் பயத்தை போக்கி படத்தை வெற்றியாக்கியுள்ளது.

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். படம் செய்துகொண்டிருக்கும்போது நிறைய அப்டேட்ஸ் கேட்கிறீர்கள். உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு தயாரிப்பாளரோ, இயக்குநரோ, ஹீரோவோ ஒரு படத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நிறைய மெனக்கெடுகிறோம்.

தினமும் நீங்கள் அப்டேட் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தால்; தவறான முடிவு எடுக்க வாய்பு இருக்கிறது. அதனால் ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களின் முதல் வேலை. எனவே எங்களுக்கு அந்த ஸ்பேஸ் கொடுத்தால்தான் நல்ல படங்கள் வரும். அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தலை மேல் தூக்கி வைப்பார்கள். நான் எனது ரசிகர்களை தலை மேல் தூக்கி வைக்க ஆசைப்படுகிறேன். என் படத்துக்கு மட்டுமில்லை. அனைத்து படங்களுக்கும் அப்டேட்ஸ் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். உங்களுக்கு நல்ல படம் கொடுக்க நாங்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதை பத்து தல பட இயக்குநர் சொல்ல சொன்னார்” என்றார். சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்துவருகிறார். அதில் அவருடன் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.