விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மாத்தூர் திருக்கை பகுதியில் வசித்து வந்துள்ளனர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த சுரேஷ் – தாட்சயணி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி, 2 ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான சுரேஷ், கடந்த 30 தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதன்பின், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார் தாட்சயணி. இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் தாட்சயணிக்கு நேரடியாகவும், தொலைப்பேசி வாயிலாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், சக்திவேல் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, தனது சகோதரி துர்கா என்பவரிடம் தொலைப்பேசியில் தெரிவித்த தாட்சயணி, “நீ எனக்கு வேணும்…” என சக்திவேல் பாலியல் ரீதியாக பேசிக்கூடிய ஆடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னரும் தாட்சயணிக்கு, சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே தாட்சயணியிடம், “ஊர் பெரியோரிடம் நாங்கள் வந்து பேசுகிறோம்” என்று துர்கா கூறியிருந்தாராம்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு கொக்கு மருந்தை சாப்பிட்டு தாட்சயணி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சக்திவேல் பாலியல் தொல்லை அளித்ததினாலே தாட்சயணி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, ஆடியோ பதிவுடன் அனந்தபுரம் காவல் நிலையத்தில் கடந்த 7-ம் தேதி மாலை புகார் அளித்துள்ளார் துர்கா.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், 306, 345(d) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தலைமறைவாக இருந்த சக்திவேலை தனிப்படை அமைத்து தேடிவந்த போலீஸார், சென்னையில் பதுங்கி இருந்தவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3 சிறுவர்களும் பெற்றோர் இருவரையும் இழந்து வாடுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.