சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது போன்று வீடுகள் மற்றும் கடைகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் மின்கட்டண குறைப்பது தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மின் கட்டணம் குறைத்து இருப்பதினால் நிறுவனங்கள் ஓரளவு சிரமம் இன்றி நடத்த முடியும்.
அதே நேரத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கான மின் கட்டணம் என்பது மிகவும் அதிகமாக உள்ளது. இந்த மின் கட்டணங்களையும் குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஏற்கனவே பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என தமிழக அரசு உயர்த்தியதால் பொதுமக்கள் மீதான பொருளாதார சுமை அதிகரித்துள்ளது.
சிறு கூறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறித்தது போன்று வீடு மற்றும் கடைகளுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழக அரசுக்கு ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மீது அக்கறை இருக்குமேயானால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மின் கட்டணத்தை குறைத்தது போன்று வீடு மற்றும் கடைகளுக்கான மின் கட்டணத்தனையும் குறைக்க வேண்டும்” என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தாமாக தலைவர் ஜி.கே வாசனின் இந்த அறிக்கையால் தமிழக அரசு வீடுகளுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. ஜி.கே வாசனின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வீடுகளுக்கான மின் கட்டணத்தை குறைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.