நாளை (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ,வீட்டு பணிப்பெண்கள் பயிற்சி அற்ற துறைகளில் ,தொழிலுக்காக முகவர் நிலையங்கள் ஊடாக செல்வது தடை செய்யப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்ட பெண்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓமான் மற்றும் ஐக்கிய எமிரேட்ஸ் நாடுகளில் தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் சுற்றுலா விசா மூலம் வெளிநாடு சென்று தொழில் வாய்ப்பு இன்றி இருப்பதாக இலங்கை தூதர அலுவலகம் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ இவர்களுக்காக முன்வரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன். இவ்வாறானவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.
இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவின் மூலம் பயிற்சி அற்ற தொழிலுக்காக பெண்களை ஈடுப்படுத்துவதை தடை செய்யுமாறு தெரிழில் அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த 570 நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகளில் 150 முறைப்பாடுகள் குறித்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று மோசடியாக அறவிடப்பட்ட ரூபா 283,833,000 தொகையை முறைப்பாட்டுகாரர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு பணியகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் பணியகத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக பல்வேறு சுற்றுவலைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
43 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பணியகம் அறிவித்துள்ளது.
இதேபோன்று இந்த வருடத்தில் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.