ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய இருமாநில சட்டமன்ற தேர்தல் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக,
காங்கிரஸ்
என மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ள நிலையில் இம்முறை காங்கிரஸிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகளும், கள நிலவரமும் வேறுமாதிரியாக வந்த வண்ணம் இருக்கின்றன.
68 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஹிமாச்சல் சட்டமன்றத்தில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2017ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 44, காங்கிரஸ் 21, சுயேட்சைகள் 2, சிபிஎம் 1 என வெற்றி பெற்றனர். வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக 48.8 சதவீதம், காங்கிரஸ் 41.7 சதவீதம், சுயேட்சைகள் 6.3 சதவீதம், சிபிஎம் 1.5 சதவீதம், பகுஜன் சமாஜ் 0.5 சதவீதம், நோட்டா 0.9 சதவீதம் என பெற்றனர்.
இந்நிலையில் 2022 ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி,
வாக்கு சதவீதம்
காங்கிரஸ் 44.2
பாஜக 44.8
ஆம் ஆத்மி 3.3
மற்ற கட்சிகள் 7.7
சீட் கணிப்பு
காங்கிரஸ் 29 முதல் 37
பாஜக 31 முதல் 39
ஆம் ஆத்மி 0 முதல் 1
மற்ற கட்சிகள் 0 முதல் 3
இதன்மூலம் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படும். வெற்றி பெற்ற சுயேட்சைகள் அல்லது சிறிய கட்சிகளின் உதவியை நாட வேண்டி வரும். அப்போது குதிரை பேரம் நடக்க வாய்ப்புகள் உருவாகும். இதேபோல் ரிபப்ளிக் – பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி,
வாக்கு சதவீதம்
பாஜக 45.2
காங்கிரஸ் 40.1
ஆம் ஆத்மி 5.1
மற்ற கட்சிகள் 9.5
சீட் கணிப்பு
பாஜக 37 முதல் 45
காங்கிரஸ் 22 முதல் 28
ஆம் ஆத்மி 0 முதல் 1
மற்ற கட்சிகள் 1 முதல் 4
இதில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால் 1985க்கு பிறகு ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் வரலாறு திருத்தி எழுதப்படும் என்பதில் சந்தேகமில்லை. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து குஜராத் தேர்தலில் அக்கட்சி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
அதனால் இம்முறை ஹிமாச்சலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையான முடிவுகளுக்கு டிசம்பர் 8ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அன்று தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.