திருச்சி: ₹5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் செல்லையா. ஏர்போர்ட் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில் பணிபுரியும் முனியன் என்பவரை, கடந்த 2009ல் செல்லையா தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியனின் மனைவி ரம்யா, ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க செல்லையாவிடம் ₹5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதையடுத்து ரசாயனம் தடவிய ₹5ஆயிரத்தை 2009 ஆக.11ம் தேதி செல்லையா வழங்கியபோது, இன்ஸ்பெக்டர் முருகேசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். முருகேசன், திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக உள்ளார்.