இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு விசேட பொதுச் சேவைகள் நிகழ்ச்சி கட்டான பிரதேச சபையில் அண்மையில் நடைபெற்றது.
பிரதேச சபையின் உறுப்பினர் அசங்க கமல்சிறி. த சில்வா இலங்கை பாராளுமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, பாராளுமன்றம் மற்றும் அதன் கோட்பாடு, பாரம்பரியம் பற்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக, சட்டவாக்க சேவைகள் மற்றம் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனகாந்த சில்வா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். அத்துடன், கட்டான பிரதேச சபையின் தலைவர் ஆர்.ஏ.சமிந்த ரத்னாயக்க உள்ளிட்ட சகல பிரதேசசபை உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இந்தத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டம் இலங்கையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு, நிலையியற் கட்டளை, பாராளுமன்ற முறைமை, பாரம்பரியம் மற்றும் சட்டம் போன்று பாராளுமன்றத்தின் பாரம்பரியம் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பிரதேச சபையின் உறுப்பினர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். அரசியலின் பரிணாம வளர்ச்சி, மாற்றப்பட வேண்டிய இடங்கள் குறித்து அவர்கள் வளவாளர்களிடம் கேள்விகளைத் தொடுத்திருந்தனர்.
எதிர்வரும் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலத்தில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு வருகை தருவது என்ற எதிர்பார்ப்புடன் இந்த விசேட நிகழ்வு முடிவுக்கு வந்தது. இதற்கான கோரிக்கையை பிரதேச சபை விடுத்திருந்தது.