குலசேகரம்: திருவட்டார் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் 24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து உயிர் தப்பினார். குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பாரதப்பள்ளி பகுதியைச் சேர்ந்த புஷ்பபாய் (60) என்பவர் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் அந்த பகுதியில் ஓடும் கோதையாற்றில் குளிக்கச்சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவர் கோதையாற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் தீயணைப்புத்துறையினர் நேற்று முன்தினம் பாரதப்பள்ளி முதல் தேமானூர் பகுதி வரை கோதையாற்றில் புஷ்பபாயை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நேற்று 2வது நாளாக தேடும் பணியில் நடந்தது. இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் திக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் புதர்களுக்கு இடையே இருந்த புஷ்பாபாய் மீட்கப்படடார். உடனடியாக அவரை கரை சேர்த்து முதலுதவி அளித்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஒரு மணி நேரத்தில் அவருக்கு நினைவு திரும்பியது.
