
தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்களர்கள் இந்த முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளை செய்துகொள்ளலாம்.
தமிழகத்தில் கடந்த 9-ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது. வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை, ஒரு மாத காலத்திற்கு இந்தப் பணி நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.

இதற்கிடையில், பணிக்குச் செல்வோர் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இன்றும் (12-ம் தேதி), நாளையும் தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.