சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 615 கிலோ வெள்ளி மற்றும் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகையை இழந்த நபர் தனது உறவினர் மீதே புகார் அளித்துள்ளதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இது குறித்து காவல்துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது.
சேலம் குகை மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்று அளித்தார். அவர் அளித்த புகாரில் அவர், “எனது தாயார் கன்னங் குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை சரியில்லை என்பதற்காக நேற்று நான் தாயாரை சந்திப்பதற்காக சென்று விட்டு இன்று காலை திரும்ப்பினேன். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதைக் கண்ட அதிர்ச்சி அடைந்த நான் உள்ளே சென்று பார்த்தபோது 615 கிலோ வெள்ளி மற்றும் நகை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் எனது மைத்துனரான சத்தியநாராயணன் ஈடுபட்டிருக்கலாம் என’ தெரிவித்துள்ளார்.
மேலும் வியாபாரம் ரீதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தொழிலை பிரித்துக் கொண்ட நிலையில் இது தொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தான் இல்லாத நேரத்தில் இன்று காலை 8 மணி அளவில் வீட்டின் பூட்டை உடைத்து அவர் 615 கிலோ வெள்ளி மற்றும் நகைகளை தனது மைத்துனர் எடுத்துள்ளார் என்று அவர் புகார் அளித்துள்ளார். தனது வீட்டில் இருந்து வெள்ளி மற்றும் நகைகளை எடுத்து சென்றவர் எனது மைத்துனர் சத்யநாராயணன் தான் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுத்து நகைகள் மற்றும் வெள்ளியை மீட்டு தர வேண்டும் என்றும் அவர் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பன்னீர்செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.