உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ராஜிவ் காந்தி குற்றவாளிகள் 6 பேர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதை அடுத்து முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உள்ளிட்டோர் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தனர்.
இதற்கிடையே தன்னை விடுவிக்கக் கோரி ராஜிவ் காந்தி குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல், தங்களையும் விடுதலை செய்யக் கோரி, நளினி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் சிறைச்சாலைக்கு கிடைக்கப் பெற்ற நிலையில், நளினி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு சிறையில் விடுதலைக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அவர் முறைப்படி விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள சாந்தன், முருகன் ஆகியோரும் விடுதலை ஆகினர். பின்னர் அவர்கள் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதே போல், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் பேரறிவாளன் நேரில் வரவேற்றார்.