கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு (EWS) 10 சதவிகிதம் இடஒதுக்கீடு என, மத்திய பா.ஜ.க அரசால் 2019-ல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் செல்லும் என, கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதனை பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரிக்க, மறுபுறம் தி.மு.க, வி.சி.க, போன்ற கட்சிகள் எதிர்த்துவருகின்றன. இந்த நிலையில், தி.மு.க-வின் இத்தகைய எதிர்ப்பை, `சமூக நீதிக்கு எதிராக செயல்படும் தி.மு.க என’ தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டித்திருக்கிறார்.

மேலும், “வழக்கம்போல் தி.மு.க தலைவர் தி.மு.க கட்சித் தொண்டர்கள் மற்றும் அவர்களது தோழமைக் கட்சியில் பெரும்பாலானோர் இந்த தீர்ப்புக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி EWS இடஒதுக்கீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பே அமல்படுத்தி விட்டது. ஆனால் தமிழகத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்.

தி.மு.க-விடம் நாவை அடகு வைத்து பிழைப்பை நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கு சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களை தீர்மானிக்க ஆண்டு வருமானம் 6 லட்ச ரூபாயாக இருந்தது. 2017-ம் ஆண்டு அந்த வருமான வரம்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டு இடஒதுக்கீட்டை தீர்மானிக்க ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் என்று வரம்பு உயர்த்தப்பட்டது.

அதன்பின்னர் 2019-ம் ஆண்டு EWS சட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளை முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்தவர்கள், தாவுத், மீர் இஸ்லாமியர்கள் போன்ற 79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள். நடைபெறவிருக்கும் அனைத்துக்கட்சி கூட்டம் நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பா.ஜ.க-வுக்கு விருப்பமில்லை. தி.மு.க-வைப் போல் போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது. ஆகவே அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக பா.ஜ.க புறக்கணிக்கிறது என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.