பாரிஸ் நகரின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நஸ்செரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வினை இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் `தி டெர்மினல்’ (The terminal) என்ற படமாக்கியுள்ளார்.
மெஹ்ரான் கரிமி நஸ்செரி, 1945 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டிலுள்ள சோலேய்மான் என்ற இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த காலகட்டத்தில் ஈரான், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் செயல்பட்டு வந்தது. ஈரானிய தந்தைக்கும் பிரிட்டிஷ் தாய்க்கும் பிறந்தார். இவர் 1974 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் படிப்பதற்காக ஈரானை விட்டு வெளியேறினார். இவர் ஈரானிற்கு திரும்பி வந்ததும், ஷா- வுக்கு எதிராக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
நாட்டை விட்டு வெளியேறிய இவர், 1988 ஆம் ஆண்டு பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து செல்ல முயற்சித்தார். ஐரோப்பாவின் பல நாடுகளில் தஞ்சம் அடைய விண்ணப்பித்தார். பெல்ஜியத்தில் உள்ள UNHCR அவருக்கு அகதிகளுக்கான சான்றுகளை வழங்கியது. ஆனால், அகதி சான்றிதழ் அடங்கிய அவரது சூட்கேஸ் பாரிஸ் ரயில் நிலையத்தில் திருடப்பட்டதாகக் கூறினார். பின்னர் பிரெஞ்ச் போலீஸ் அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர்.
ஆனால், இவரிடம் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஏதும் இல்லாததால் வேறு எங்கும் நாடு கடத்த முடியவில்லை. விமான நிலையத்தில் தங்கி அங்குள்ள அதிகாரிகளிடம் நட்பாக பழகி வந்துள்ளார். அவர்கள் கொடுக்கும் சிறு சிறு வேலைகளையும் செய்து, அதே இடத்தில் தன்னுடைய நாட்களை செலவிட்டுள்ளார். அங்குள்ள அதிகாரிகள், இவருக்கு ‘லார்ட் ஆல்ஃபிரட்’ என்று செல்லப்பெயர் சூட்டினர். மேலும், இவர் விமான நிலைய பயணிகளிடையே பிரபலமானார்.
இவர் இறுதியாக அகதிகளுக்கான ஆவணங்களைப் பெற்றபோது, விமான நிலையத்தை விட்டு வெளியேறுவது குறித்த தன் நிலைமையையும் பாதுகாப்பின்மையையும் பற்றிக் கூறினார். மேலும், அந்த ஆவணத்தில் கையெழுத்திட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகள் விமான நிலையத்திலேயே தங்கியுள்ளார். அதன் பிறகு 2006ம் ஆண்டு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் பாரிஸில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, மீண்டும் சார்லஸ் டி கோல்லி விமான நிலையத்தில் வசித்து வந்தார் என்று விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார்.
இவருடைய கதையை மையமாக வைத்து பிரெஞ்சு திரைப்படமான “லாஸ்ட் இன் டிரான்சிட்” 1993 ஆம் ஆண்டு வெளியானது.மேலும், டாம் ஹாங்க்ஸ் நடித்து ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் “தி டெர்மினல்” 2004 ம் ஆண்டு வெளியானது.