உலக பொருளாதாரத்தில் முதன்மையாக விளங்கும் இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்களும் ஜி- 20 உச்சிமாநாட்டில் சந்தித்துக் கொண்டனர்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும், இன்று ஜி-20 உச்சிமாநாட்டில் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு வளர்ந்து வரும் வேறுபாடுகளைச் சமாளிக்கவும், மோதலை தவிர்க்கவும் வழிவகுக்கும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

தைவான் உள்ளிட்ட சில பிரச்னைகள் தொடர்பாகப் பல மாதங்களாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் நிலவிய நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சிமாநாடு இந்தோனேஷியாவின் பாலி-யில் நடைபெற்றது. இன்றைய தினம் உச்சிமாநாடு அமர்வுக்கு முன்பு பைடன், ஜி ஜின்பிங் கைக்குலுக்கிக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மாநாட்டில் நேர் எதிராக அமர்ந்திருந்த பைடன், ஜி ஜின்பிங்கிடம், “பீஜிங், வாஷிங்டனில் பொறுப்புகளைப் பகிர வேண்டும். இதன்மூலம் மோதல்களாக உருவெடுக்கும் போட்டிகளைத் தவிர்க்க முடியும்” என்று கூறினார். அதற்கு ஜி ஜின்பிங், “சீனாவும் அமெரிக்காவும் உறவைச் சரியாகக் கையாளும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன” என்றார்.