நாய் குட்டிகளுக்கு அரேஞ் மேரேஞ் : இந்து முறைப்படி திருமணம் – பிள்ளையில்லா தம்பதி மகிழ்ச்சி!

திருமணம் என்பது இருவர் சேர்ந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்த நடைமுறையாக மட்டுமல்லாமல், இரு வேறு குடும்பங்கள் இணையக் கூடிய ஒன்றாக இந்திய சமூகத்தில் அமைந்துள்ளது. திருமணத்தின் மீதான எதிர்பார்ப்புகள், திருமணத்திற்கான ஏற்பாடுகள், திருமணத்திற்கான செலவுகள் என்பது இந்திய குடும்ப அமைப்பில் மிகவும் முக்கியமான ஒன்று. 

திருமணத்திற்கு உறவினர்கள் முதல் நினைவில் பதிந்திருக்கும் அத்தனை மனிதர்களையும் அழைத்து, தங்கள் வீட்டின் சுபகாரியத்தில் பங்குகொள்ள வைப்பது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான செயல்பாடகவே இருந்து வருகிறது. கல்யாண பந்தலில் இருந்து பந்தி வரை அனைத்தும் அந்த மக்களின் வாழ்வியலோடு ஒருகாலத்தில் இருந்தது. தற்போதும் அதே நடைமுறைகள் இருக்கிறது என்றாலும், உலகமயமாக்கலின் தாக்கம் என்பது திருமணத்தை மட்டும் விட்டுவைக்கவா போகிறது. 

விமானத்தில் திருமணம் செய்துகொள்வது, தெருவில் திருமணம் செய்துகொள்வது, திருமண வரவேற்பின்போது திரையிசை பாடல்களுக்கு நடனமாடியபடியே வருவது, குறுகிய வட்டத்தில் மட்டும் குறிப்பிட்ட ‘தீம்’ வைத்து திருமணம் செய்வது என திருமண நிகழ்வின் வடிவம் தற்போது பலவகையில் மாறிவிட்டது. இதேபோன்ற வித்தியாசமான திருமணங்கள் அனைத்தும் தற்போது மனிதர்களுக்கு மட்டும் இல்லை செல்லபிராணிகள் வரை நீண்டிருப்பதுதான் ஆச்சரியம். 

ஹரியானாவின் குருகிராம் நகரில், இரண்டு பேர் சேர்ந்து தங்களின் இரு செல்லப்பிராணிகளுக்கு திருமணம் செய்துவைத்த நிகழ்வுதான் தற்போது பரவான கவனத்தை பெற்றுள்ளது. இரண்டு செல்லப்பிராணிகளுக்கும், அவரின் உரிமையாளர்களின் சம்மதத்தின்படி, நேற்று மாலை திருமணம் நடந்தது. இரு உரிமையாளர்களும் தங்களின் செல்லப்பிராணிகளுக்கான இணைய தேடி கண்டுபிடித்து பொருத்தம் பார்த்து, இந்த வழக்கத்திற்கு மாறான  திருமணத்தை நடத்தியுள்ளனர். 

செரு (ஆண் நாய்), ஸ்வீட்டி (பெண் நாய்) இருவருக்கும் நேற்று இரவு 8.30 மணியளவில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமத்திற்கு, உரிமையாளர்களுக்கு தெரிந்தவர்களில் மொத்தம் 100 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அவர்களுக்கும் கலந்துகொண்டு இரு செல்லப்பிராணிகளையும் வாழ்த்திவிட்டு சென்றனர். 

இதுகுறித்து, ஸ்வீட்டியை தனது பிள்ளை போன்று வளர்த்த ராணி கூறுகையில்,”எனக்கு பிள்ளைகள் என்று யாருமில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் கோயில் ஒன்றில் இருந்து ஸ்வீட்டியை எனது கணவர் எடுத்துவந்தார். அப்போது இருந்து, ஸ்வீட்டியை எனது பிள்ளை போன்று பார்த்துக்கொள்கிறேன். 

இந்த திருமணத்தை இந்து முறைப்படி நடத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார். மேலும்,  ஸ்வீட்டிக்கு வயது 8 என்றும்  தெரிவிக்கப்பட்டது. தற்போது, நாய்களுக்கு இடையே நடைபெற்ற இந்த திருமணம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.