ஓடும் ரயிலில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த தனது 3 வயது மகளை காப்பாற்ற, தந்தையும் கீழே விழுந்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் கணேஷ்யாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஹிரா ரேயின். 32 வயதான இவர், டெல்லியில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக, மனைவி ஜரினா ஹதூன், 3 வயது மகள் ரோஸி பர்வீன், மைத்துனர் ஃபைரோஸ் ஆகியோருடன், டெல்லியில் இருந்து கடந்த சனிக்கிழமை சேனானி விரைவு ரயிலில் ஏறியுள்ளார்.
ஆனால் அன்று ரயிலில் பொதுப்பெட்டியில் அதிக கூட்டம் இருந்ததால், ஸ்லீப்பர் பெட்டியில் ஹிரா ரேயின் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் ஸ்லீப்பர் படுக்கை உறுதி செய்து தருவதாக டிடிஇ கூறிய நிலையில், கூட்டம் நிரம்பி வழிந்ததால், அவரால் ஹிரா ரேயின் குடும்பத்திற்கு இருக்கை ஒதுக்கிதர முடியவில்லை. இதனால், ஹிரா ரேயின் தனது குடும்பத்தினருடன் படிக்கட்டுக்கு அருகில் அமர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வாரணாசி பஹேத்வா நிறுத்தத்திற்கு சற்று தூரத்திற்கு முன்னதாக, கதவுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஹிரா ரேயினின் 3 வயது மகள் எதிர்பாராதவிதமாக ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் பதறியடித்துக்கொண்டு தந்தை ஹிரா ரேயினும் மகளை காப்பாற்ற திடீரென குதித்துள்ளார். இருவரும் கீழே விழுந்ததும் ஹிரா ரேயினின் மனைவி ஜரினா ஹதூன் உடனடியாகச் சென்று ரயிலை நிறுத்தும் செயினை பிடித்து இழுத்துள்ளார்.
பின்னர் ரயில் நின்றதும், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள், ஹிரா ரேயினின் மனைவி ஜரினா ஹதூன், மைத்துனர் ஃபைரோஸ் ஆகியோர் ஓடிச் சென்று தந்தை – மகள் இருவரையும் மீட்டனர். ஆனால் குழந்தை அங்கேயே உயிரிழந்திருந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹிரா ரேயினும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
