ஆர்ஜித சேவை டிக்கெட்; திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இலவச டோக்கன் மற்றும் ரூ.300 கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறது.

இந்த இலவச டோக்கன் மற்றும் ரூ. 300 கட்டண தரிசன டோக்கன்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில், மாதந்தோறும் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.

அந்தவகையில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்கள் கடந்த 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.

நாள்தோறும் 35 ஆயிரம் டிக்கெட் வீதம் டிசம்பர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்கின்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் முழுவதுமாக விற்று தீர்ந்தது. இந்த நிலையில் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் 27ம் தேதி காலை 10 மணிக்கு அதே இணைய தளம் மூலம் திருமலையில் தங்கும் அறைக்கு முன்பதிவு செய்துகொள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி இருக்கிறது.

அதே போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் கலந்துகொண்டு வழிபட நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் சாமி தரிசனம் செய்யலாம். இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.