காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற புதுப்பிக்கும் பணிக்காக அரசு 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியதாகவும், கோவில் இணைய தளம் வாயிலாக பக்தர்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தை இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி திருப்பணிக்காக பயன்படுத்தாமல் முறைகேடு செய்ததாக காஞ்சிபுரம் மாஜிஸ்ட்ரேட்ட நீதிமன்றத்தில் ஏ.டில்லிபாபு என்பவர் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். மேலும், அரசு நிதியிலும் முறைகேடு செய்ததாகவும் கூறியிருந்தார்.
புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவின்படி, இணை ஆணையர் கவிதா உள்ளிட்டோர் மீது சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்த போது புகார்தாரர் டெல்லிபாபு தரப்பில் யாரும் ஆஜராக வில்லை.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், டெல்லிபாபு கொடுத்த புகாரை முறையாக ஆய்வு செய்யாமல், இணை ஆணையர் கவிதா மீது வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கவிதா உள்பட அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அரசு பணி செய்யும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை பெற வேண்டும் என கூறியுள்ளார்.
புகார் கொடுத்த டெல்லி பாபு கோவிலுக்கு சொந்தமான கடையில் உள்வாடகையில் இருந்த நிலையில் கடையில் இருந்து வெளியேற்றியதால், உள்நோக்கத்துடன் இணை ஆணையர் கவிதா மீது புகார் அளித்துள்ளதாகவும் அரசு ஊழியர்கள் தங்களது பணியை எந்த வித பயமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காகவே அவர்கள் மீது இதுபோல வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை பெறவேண்டும் என்று குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு கூறுவதாக தெரிவித்துள்ள நீதிபதி இணை ஆணையர் கவிதா மீது சிவகாஞ்சி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோவிலை புதுப்பிக்க பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலித்ததாக எழுந்துள்ள குற்றம்ச்சாட்டு குறித்து இரண்டு உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டால் இணை ஆணையர் கவிதா மீது இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் , ஆணையர் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.