அகமதாபாத்: குஜராத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கட்சித் தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே அமித் ஷாவின் சமரச பேச்சு தோல்வியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் சட்டப் பேரவை தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை தொகுதிக்கு 178 வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தத் தேர்தலில் 40 தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மீதமுள்ள 16 வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து கட்சித் தலைமை குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள பாஜக தலைமையகம் முன்பாக, பயத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த தவல்சிங் ஜாலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாஜக தலைவர்கள் கூறுகையில், ‘மாநில பாஜக அலுவலகத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
முதல்வர் பூபேந்திர படேல், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகமானதால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டார். ஆனால் சீட் கிடைக்காத நிர்வாகிகள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அழைத்து சமாதானப்படுத்தாவிட்டால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்துவிடும்’ என்றனர்.