ஜி-20 உச்சி மாநாடு | அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பாலி: பாலியில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துப் பேசினர்.

முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களான, மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உட்பட இந்தியா – அமெரிக்கா இடையே உத்திசார் கூட்டு செயல்பாட்டை தொடர்ந்து அதிகரிப்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்தனர். குவாட், ஐ2யூ2 போன்ற புதிதாக அமைக்கப்படும் நாடுகளின் குழுக்களில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு ஏற்பட்டிருப்பது குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

இரு தலைவர்களும் உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர். இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவின் ஜி-20 தலைவர் பொறுப்பின் போது இரு நாடுகளும் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தினருடன் கலந்துரையாடல்: இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர், இந்தியாவின் நண்பர்கள் அடங்கிய 800-க்கும் மேற்பட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடியதுடன் அவர்களிடையே உரையாற்றினார். இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்கள் எழுச்சியுடன் குழுமியிருந்தனர்.

பிரதமர் தமது உரையில், இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையேயான நெருங்கிய கலாச்சார, நாகரீக தொடர்புகளை எடுத்துக் கூறினார். இரு நாடுகளுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் வர்த்தக தொடர்பை பிரதிபலிக்கும் “பாலி ஜத்ரா” என்னும் மிகப் பழமையான பாரம்பரியத்தை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் காணப்படும் பொதுவான அம்சங்களை அவர் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்தினர், தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு மூலம், இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உயர்த்தி வருவதை பிரதமர் பாராட்டினார். இந்தியா – இந்தோனேஷியா உறவில் காணப்படும் ஆக்கபூர்வமான வளர்ச்சி பற்றி கூறிய அவர், இந்த உறவை வலுப்படுத்துவதில் இந்திய சமுதாயத்தினரை மிக முக்கியப் பங்காற்றியதை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் வளர்ச்சிப் பற்றி விளக்கிய பிரதமர், டிஜிட்டல் தொழிலநுட்பம், நிதி, சுகாதாரம், தொலைத் தொடர்பு, விண்வெளித் துறை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்து வரும் அற்புதமான வளர்ச்சியையும், சாதனைகளையும் பட்டியலிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்கான செயல் திட்டம், உலகின் அரசியல் பொருளாதார அபிலாசைகளை உள்ளடக்கியது என்று கூறிய அவர், தற்சார்பு இந்தியாவின் தொலை நோக்கு உலக நலனுக்கானது என்றார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள, அடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டிலும், குஜராத்தில் நடைபெற உள்ள காத்தாடி திருவிழாவிலும் கலந்து கொள்ளுமாறு இந்திய சமுதாயத்தினர் மற்றும் இந்திய நண்பர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.