ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி பல உலகத் தலைவர்களை சந்தித்துள்ளார்.
உலகின் முக்கியமான மாநாடுகளில் ஒன்றான, ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்று உள்ள பிரதமர் மோடி பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார். இதற்கிடையில் பல உலகத் தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
முன்னதாக இந்தோனேஷியாவிற்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடொடோ வரவேற்றார். மாநாடு தொடங்குவதற்கு முன்பாக விழா மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஒருவரை ஒருவர் சந்தித்து கை குலுக்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அதேபோல, பிரிட்டன் பிரதமராக முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிசி சுனக்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டனர். ஏற்கனவே ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி விழா அரங்கில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர். ஆப்பிரிக்கன் யூனியன் உடைய தலைவரும் ஜனங்கள் நாட்டின் அதிபருமான மேக்கி சேல், நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ருட்டி, ஆகியோருடனம் பிரதம நரேந்திர மோடி சந்திப்பு நிகழ்த்தினார்.
இந்தியாவுடன் இன்னமும் நெருங்கிய உறவை ஏற்படுத்த விரும்புகிறோம் என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட உள்ளது.
இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சீன அதிபர் & பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையிலான சந்திப்பையும், ரஷ்யாவின் சார்பில் கலந்து கொண்டுள்ள அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் லாவ்ரோ இடையிலான சந்திப்பையும் உற்று நோக்க வேண்டிய முக்கிய சந்திப்புகளாக உள்ளது. இதே போல ஆஸ்திரேலியா பிரேசில் ஜெர்மனி உள்ளிட்ட கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், ‘இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான ஆயிரக்கணக்கான வருட வர்த்தக உறவுகளை கொண்டாடுகிறோம். இந்தோனேசியா, பாலிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு இந்தியனுக்கும் வித்தியாசமான உணர்வு, நானும் அதே அதிர்வை உணர்கிறேன். இந்தியா மற்றும் இந்தோனேஷியா இரண்டும் தங்கள் கலாச்சாரங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன. சங்கராந்தி அன்று, அழகான மற்றும் வண்ணமயமான காத்தாடிகள் இரு நாடுகளின் வானத்தை நிரப்புகின்றன.
இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவுகள் நல்ல மற்றும் கடினமான காலங்களில் வலுவாக உள்ளன. 2018ல், இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோது, உடனடியாக சமுத்திர மைத்ரியை இயக்கத் தொடங்கினோம். இந்தியாவும் இந்தோனேசியாவும் நீடித்த கூட்டுறவைக் கொண்டுள்ளன. இந்தியர்கள் உலகம் முழுவதும் முத்திரை பதித்து வருகின்றனர்.
உலகளாவிய இந்திய CEO க்கள் முதல் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் வரை உலக அளவில் நம்பர் 1 ஆக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.புதிய இந்தியா வேகத்துடனும் அளவுடனும் வளர்ந்து வருகிறது. 2014 முதல், 320 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைத் தொடக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம்.
முழுமையான ஆரோக்கியத்தை நோக்கிய உலகளாவிய இயக்கத்தையும் இந்தியா முன்னெடுத்துச் செல்கிறது. யோகா மூலம், ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகிற்குப் புரிந்துகொள்ள உதவுகிறோம்.பாதுகாப்புத் துறையில், இந்தியா, பல தசாப்தங்களாக, இறக்குமதியைச் சார்ந்து இருந்தது. ஆனால் இப்போது, தனது திறன்களை விரிவுபடுத்தி உள்ளது.அது பிரம்மோஸ் ஏவுகணையாக இருந்தாலும் சரி, தேஜாஸ் போர் விமானமாக இருந்தாலும் சரி, வளர்ந்து வரும் ஒவ்வொரு பாதுகாப்புத் திறனும் இப்போது உலகையே மெய்சிலிர்க்க வைக்கிறது.
கோவிட் தொற்றுநோய்களின் போது மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளில் இந்தியாவின் தன்னிறைவு உலகிற்கு பயனளித்தது. பாலியுடன் இந்தியா பல்லாயிரம் ஆண்டுகால உறவைக் கொண்டுள்ளது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அந்த பாரம்பரியம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது, ஒவ்வொரு கணமும் அதனுடன் இணைந்திருப்பது வித்தியாசமான மகிழ்ச்சியை அளிக்கிறது , என்று கூறினார் பிரதமர்.
– நிரஞ்சன்குமார்
இதையும் படியுங்கள் – நவீன இந்தியாவின் சிற்பி.. கல்வி முதல் தொழில்துறை வரை வரலாறு பேசும் ’நேரு’வின் சாதனைகள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
