வேலூர்: தவணை கட்ட தவறினாலும் நிதி முறைகேடு இல்லாத மகளிர் குழு கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 31ம்தேதி வரை நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் நிபந்தனைகளின் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதையடுத்து தள்ளுபடிக்கு தகுதியான இறுதி பயனாளிகள் பட்டியலை தயார் செய்ய கூட்டுறவுதுறை அலுவலர்கள், மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலை வெளிமாவட்ட கூட்டுறவு தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகளிர் சுய உதவி குழு கடன்களில் தவணை தவறிய கடன்கள் உள்ளன. இதில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் தவணை தவறிய உரிய காலவரையரைக்குள் தாவா நடவடிக்கை தொடரவில்லை. இந்த காரணத்திற்காக மட்டும் சட்டப்பூர்வ ஆய்வு, விசாரணை அறிக்கைகளின் அடிப்படையின்பேரில் நடவடிக்கை மேற்கொண்டு தண்டத்தீர்வை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வினங்கள் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு தகுதியற்றவை என நிராகரிக்கப்படுவதாக சில மண்டல இணைப்பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதன் மீது தெளிவுரை வழங்கவும் கோரியுள்ளனர். இதனை பரிசீலிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கடன்களில் எவ்வித நிதி முறைகேடுகள் இல்லாத கடன்கள் மற்றும் கடன்களின் உண்மை தன்மை உறுதி செய்யப்பட்ட கடன்கள் அரசாணைகளில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. தள்ளுபடிக்கு தகுதி பெற்றிருப்பின் அதனை தள்ளுபடிக்கு தகுதியானதாக கருதலாம் என்று தெளிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.