தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு : ரஜினி, கமல் இரங்கல் ; தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான கிருஷ்ணா உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்ட இரங்கல் செய்தியில் ‛‛நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு தெலுங்கு சினிமாவிற்கு பெரும் இழப்பு. அவருடன் 3 படங்களில் நடித்த நினைவுகள் எப்போதும் போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

கமல்
நடிகர் கமல்ஹாசன் பதிவிட்ட இரங்கல் குறிப்பில், ‛‛தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த கிருஷ்ணா மறைந்துவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. அன்னை, சகோதரர், தந்தை என அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து துக்கத்தில் வாடும் தம்பி மகேஷ்பாபுவின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கம் இரங்கல்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை : தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கிய மூத்த நடிகர் கிருஷ்ணா மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். நடிகர் திரு.கிருஷ்ணா அவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு திரையுலகில் இயங்கி வந்தவர். அவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பத்மபூஷன், தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர். மேலும் பார்லிமென்ட் உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் அவரது மகன் நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்''

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தி : ‛‛தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரும் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான திரு. கிருஷ்ணா அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமுற்றேன். கிருஷ்ணா அவர்கள் என் மீது அளவற்ற அன்பும் நட்பும் செலுத்தியவர். 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள, திரு. கிருஷ்ணா அவர்கள் நல்ல மனிதர் மற்றும் மிகச்சிறந்த நடிகர்.
அவரது இழப்பு திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் திரு. மகேஷ் பாபு, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

சூர்யா
நடிகர் சூர்யா வெளியிட்ட இரங்கல் : ‛‛கிருஷ்ணா காருக்கு எங்கள் பிரார்த்தனைகளும், மரியாதைகளும். மகேஷ்பாபு மற்றும் குடும்பத்தினருக்கு நிறைய அன்பையும் வலிமையையும் அனுப்புகிறோம். உங்களுக்கு இது கடினமான ஆண்டு. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.

விக்ரம்
நடிகர் விக்ரம் வெளியிட்ட இரங்கல் பதிவு : ‛‛கிருஷ்ணா போன்ற மென்மையான உள்ளம் படைத்தவர் உடன் பணிபுரிந்தது எனக்கு கிடைத்த பெருமையாகும். அவருடைய மறைவால் துயரப்படும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். என் அன்பு நண்பர் மகேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகளும் இதயப்பூர்வமான அனுதாபங்களும்'' என தெரிவித்துள்ளார்.

சரத்குமார் அஞ்சலி
கிருஷ்ணாவின் மறைவுக்கு நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மகளும், நடிகையுமான வரலட்சுமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி
மறைந்த நடிகர் கிருஷ்ணாவிற்கு தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கிருஷ்ணாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், விஜய் தேவரகொண்டா, பவன் கல்யாண், மோகன்பாபு, வெங்கடேஷ், அதிவி சேஷ், நாக சைதன்யா, இயக்குனரி திரி விக்ரம், தயாரிப்பாளர் சுரேஷ்பாபு, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.