பட்டினி கிடந்து வென்றேன்; நெகிழச் செய்த அண்ணாமலை!

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், ‘நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதன் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

கரூரில் விவசாய குடும்பத்தில் நான் பிறந்தேன். இன்ஜினியரிங் படித்து முடித்ததும், உடனே வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி தருவேன் என்று குடும்பத்தினர் நினைத்தனர்.

என்னுடைய படிப்புக்கும், மேற்கொள்ளும் பணிக்கும் தொடர்பே இல்லாதது போல், எனக்கு தோன்றியதால் நான் வேலைக்கு செல்லவில்லை. எனவே, சொந்தமாக வணிகம் செய்யலாம் என லக்னோவில் 8.50 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்று, எம்பிஏ படித்தேன்.

இதன் பின்னர், ஐபிஎஸ் தேர்வுக்கு தயாரானேன். என்னுடைய செலவுகளை சமாளிப்பதற்காக, ஒரு பயிற்சி நிறுவனத்தில் வகுப்பு எடுத்தேன். மாத கடைசி நாளில் செலவை கட்டுக்குள் வைப்பதற்காக இரவு உணவை தவிர்த்து இருக்கிறேன்.

இதற்காகவே மதிய நேரத்தில் முழு சாப்பாடு கிடைக்கும் உணவகங்களை தேடி சென்று இருக்கிறேன். இப்படி எல்லாம் தேவையை குறைத்துக் கொண்டு பயிற்சி பெற்றபோதும் யுபிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்கிற கனவை நான் விட்டு விடவில்லை.

இதன் காரணமாக கடந்த 2011ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆனேன். அப்போது என்னுடன் வெற்றி பெற்ற சிலர் இப்போது உயரிய விருது பெற்றுள்ளனர். இவர்களில் சிலர், ஊழல் செய்து சிறையிலும் உள்ளனர்.

பலமுறை தேர்வு எழுதுபவர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளில் தங்களுடைய உறவினர், நண்பர்கள் பழிச் சொற்கள், அவச்சொற்கள் மற்றும் அவமானங்களை கடந்தே வெற்றியை பெறுவார்கள். தேர்வர்களின் பெற்றோருக்கும் அதே சூழல் ஏற்படும்.

நான் போட்டி தேர்வு எழுதும் எண்ணத்தை எனது தந்தையிடம் சொன்னபோது‘ஊருக்கு வந்துவிடாதே. பயிற்சி செய்’ என்றார். இது போன்ற சூழலில் தான் நாம் உறுதியுடன் உழைப்பதற்கான நம்பிக்கை பிறக்கிறது.

பயிற்சியின் போது மொபைல் போன் பயன்படுத்துவது, திருமணம், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் இருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும்.

இவ்வாறு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது, சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.