சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி மற்றும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். பாஜக எம்எல்ஏக்கள் தங்களுடைய தொகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்தான கோரிக்கை மனுவை ஸ்டாலினிடம் அளித்தனர்.
ஸ்டாலினை சந்தித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன் “நெல்லையப்பர் கோவிலுக்கு புதைவட மின் இணைப்பு அமைத்து தர வேண்டும், தேர் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
மொட்டக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி அவருடைய தொகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாகவும் தமிழக அரசு இடம் அளித்து ஒப்புதல் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “மண்டைக்காடு மத கலவரம் குறித்து வேணுகோபால் கமிஷன் பற்றி முதலமைச்சரிடம் ஆலோசித்தேன் வேணுகோபால் கமிஷன் அறிக்கையை அரசாணையாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினேன். மத கலவரங்களை தடுக்க கூடிய வகையில் எதிர்காலத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் கட்ட வேண்டுமானால் தமிழக அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று கட்ட வேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தேன்.
மேலும் அறநிலை துறைக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அரசு நிலங்களை தவறாக பயன்படுத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் குறிப்பிட்டதாக தெரிவித்தார். அனைத்து விவரங்களையும் கேட்டுக் கொண்ட ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.