4 பெண்கள் பலாத்காரம்.. 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது..!

பழங்குடி இருளர் இன பெண்கள் 4 பேர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.மண்டபம் கிராமத்துக்கு கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி, திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த திருக்கோவிலூர் போலீசார் சென்றனர். அப்போது, பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சோதனை நடத்தியதோடு, அங்கிருந்த ஒரு கர்ப்பிணி உட்பட 4 பெண்களை விசாரணை என்ற பெயரில் போலீஸ் வேனில் கூட்டிச் சென்றனர்.

செல்லும் வழியில், தைலமர தோப்பில் வைத்து 4 பெண்களையும் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகரன், போலீஸ்காரர்கள் பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள், விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் கூறினர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147-சட்ட விரோதமாக 5 பேர் சேர்ந்து தாக்குதல், 156-பொது அமைதியை சீர்குலைத்தல், 323-கையால் தாக்குதல், 341-வழிமறித்து தாக்குதல், 342-முறையற்ற சிறை வைத்தல், 348-மிரட்டுதல், 376-பாலியல் பலாத்காரம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உட்பட 5 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விழுப்புரத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகரன், போலீஸ்காரர்கள் பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகிய 4 பேருக்கும் ஏற்கனவே ஜாமீன் கிடைத்தது. ஆனால், இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை.

எனவே அவர், தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அப்போது அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், சம்பந்தப்பட்ட விழுப்புரம் நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த மே மாதம் 16-ம் தேதி விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக இன்ஸ்பெக்டர் சீனிவாசன், விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகினார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவின் மீது உத்தரவு தெரிவிப்பதற்கு முன்பாகவே தன்னை கைது செய்ய நேரிடும் என்று கருதிய இன்ஸ்பெக்டர் சீனிவாசன், நீதிமன்றத்தில் இருந்து தப்பிச்சென்றார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அன்றைய தினமே கோர்ட் உத்தரவிட்டது.

அந்த சமயத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலம் முடிவடைந்து சீனிவாசன், அரக்கோணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். திருக்கோவிலூர் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மருத்துவ விடுப்பு எடுத்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், அவர் நேற்று காலை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாக்கியஜோதி முன்னிலையில் சரணடைந்து தனக்கு இவ்வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கும்படி கேட்டு மனுதாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதி பாக்கியஜோதி தள்ளுபடி செய்ததோடு இன்ஸ்பெக்டர் சீனிவாசனை கைது செய்து வருகிற 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசனை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.