உதய்பூர்: ராஜஸ்தானின் உதய்பூர், குஜராத்தின் அகமதாபாத் இடையிலான ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ம் தேதி திறந்து வைத்தார்.
கடந்த 12-ம் தேதி இரவு இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள அசர்வா ரயில் நிலையம் அருகேகுண்டு வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 13-ம் தேதிகாலையில் சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவ்வழியாக செல்ல இருந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனிடையே சம்பவ இடத்துக்குச் சென்ற தீவிரவாத தடுப்புப்படையினர்(ஏடிஎஸ்), டெட்டனேட்டர் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர். இதையடுத்து தீவிரவாத கோணத்தில் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சதித் திட்டத்துக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.