லக்னோ: உத்தர பிரதேசம் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக ரகுராஜ் சிங் சாக்யா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் கடந்த அக்டோபர் 10-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அவர் எம்.பி.யாக இருந்த மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு வரும் டிச. 5-ம் தேதிஇடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (44) சமாஜ்வாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக சார்பில் மெயின்புரி தொகுதி வேட்பாளர் குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. முலாயம் சிங்கின் 2-வது மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் பாஜகவின் வேட்பாளராக ரகுராஜ் சிங் சாக்யா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சமாஜ்வாதியின் முன்னாள் மூத்த தலைவர் ஆவார். முலாயம் சிங்கின் தம்பி சிவபால் யாதவின் வலதுகரமாக கருதப்பட்டவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவில் இணைந்த அவர் மெயின்புரி தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராகவும் முலாயமின் 2-வது மகன் பிரதீக் யாதவுக்கு ஆதரவாகவும் சிவபால் சிங் செயல்பட்டு வருகிறார். சிவபால் சிங்கின் தீவிர ஆதரவாளர் மெயின்புரி தொகுதி பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டு இருப்பதால் சமாஜ்வாதி வாக்குகள் பிரியும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு யாதவர்கள், முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. அதோடு அகிலேஷின் மனைவி டிம்பிள் தாக்குர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். மெயின்புரி தொகுதியில் தாக்குர் சமுதாயத்தினர் பெரும் எண்ணிக்கையில் வசிப்பதால் டிம்பிள் எளிதாக வெற்றி பெறுவார் என்று சமாஜ்வாதி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.