சென்னை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெளிநாட்டு பணம், செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். பின்னர், அவரது வீட்டில் வெடிபொருட்கள், அதற்கான மூலப்பொருட்கள், கைப்பற்றப்பட்டன. முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) இந்த வழக்கு மாற்றப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாகை 8 மாவட்டங்கள், கேரளாவில் பாலக்காடு உட்பட நாடு முழுவதும் 43 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 10-ம் தேதி சோதனை நடத்தினர். சென்னையில் புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா, மண்ணடி உள்ளிட்ட 8 இடங்களில் தமிழக போலீஸார், என்ஐஏ அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். கோவையில் வெடித்த கார், சென்னையில் வாங்கப்பட்டது என தகவல் வெளியானதால், சென்னை புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் வசிக்கும் முகமது நிஜாமுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மண்ணடி இப்ராஹிம் தெருவில் உள்ள ராஜாமுகமது, ஓட்டேரியில் ஜலாவுதீன், வியாசர்பாடியில் ஜாபர் அலி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையில் 18 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னையில் மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மண்ணடி, முத்தியால்பேட்டை, எஸ்பிளனேடு, கொடுங்கையூரில் 5 இடங்களில் சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் சிலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை சமீபத்தில் ஒரு பட்டியல் அனுப்பியது. அதன் அடிப்படையிலேயே தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை முத்தியால்பேட்டையில் ஒருவரது வீட்டில் இருந்து ரூ.4.90 லட்சம் ரொக்கம் மற்றும் சீனா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளின் பணம் உட்பட மொத்தம் ரூ.10.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வர்த்தக நிறுவனத்தில் இருந்து லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எஸ்பிளனேடு பகுதியில் முகமது முஸ்தபா (31), தவ்பீக் அகமது (29), கொடுங்கையூர் பகுதியில் தப்ரீஷ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், வருமான வரித் துறையிடம்ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. செல்போன்களை தடயவியல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம். 2 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.